×

திருப்புவனம் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் கவலையில் விவசாயிகள்: அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

திருப்புவனம்: திருப்புவனம் பகுதியில் கடந்த ஆண்டுகளில் பெய்த தொடர் மழையாலும், வைகையில் தண்ணீராலும் இப்பகுதி செழித்து நெல்,வாழை, கரும்பு, தென்னை போன்ற சாகுபடி நன்றாக விளைச்சல் கண்டுள்ளது. கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தென்னை மரத்திற்கு அடிக்கடி தண்ணீர் பாய்ச்சினால் தான் நல்ல மகசூல் கிடைக்கும். இந்த ஆண்டு தென்னை மரங்களில் நாற்பது நாளில் வெட்டிய போது எதிர்பார்த்ததை விடஅதிக மகசூல் கிடைத்துள்ளது.

ஆனால் எதிர்பார்த்த லாபம் கிடையாது. விலை அதள பாதாளத்தில் உள்ளது. விளைச்சல் இருந்தும் விலை கிடைக்கவில்லையே என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். அதே வேளையில் திருப்புவனத்தில் உள்ள மொத்த வியாபாரிகளோ வெளி மாநிலங்களில் இருந்து போதிய ஆர்டர் இல்லாததால் குடோனில் தேங்காய்கள் தேங்கி கிடப்பதாக சோகத்துடன் கூறுகின்றனர்.

திருப்புவனம் புதூர் விவசாயி சலீம் கூறுகையில், நான் மூன்று ஏக்கரில் தென்னை விவசாயம் செய்து வருகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக பெய்த மழையாலும் ஆற்றில் தண்ணீர் வந்ததாலும் மோட்டார் பாசனத்துக்கு தண்ணீர் குறைவின்றி கிடைத்தது. அதனால் ஏக்கர் ஒன்றுக்கு 4ஆயிரம் காய்கள் வரை மகசூல் கிடைக்கிறது. ஆனால் விலைவாசி இப்படி அதளபாதளத்தில் போய் விட்டது. மரம் ஏறும் தொழிலாளிகள் ஒரு மரம் ஏறுவதற்கு ரூ.20 கேட்கிறார்கள்.

வியாபாரிகளோ ஆயிரம் காய்க்கு லாபக்காய் என்று 125காய்கள் எடுக்கிறார்கள். ஒரு காய் ரூ.10க்கு விற்றது. கடந்த ஒரு வருடமாக ஒருகாயை ரூ.6க்குத்தான் வாங்குகிறார்கள். விலை வீழ்ச்சியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை என்றார். வியாபாரி சோழவந்தான் ராஜேஸ் கூறுகையில், தமிழகம் முழுவதும் தேங்காய் நல்ல விளைச்சல் என்பதால் விலைவாசி குறைந்து விட்டது. நான் மத்தியப்பிரதேசம், குஜராத் போன்ற வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வருகிறேன்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேங்காய் வரத்து அதிகமாவதால் அங்கு விற்பனை மந்தமாகி வருகிறது். நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது தான் லாரிகளில் வெளி மாநிலத்திற்கு ஏற்றப்படுகிறது என்று சோகத்துடன் தெரிவித்தார். வைகை பூர்வீக விவசாயிகள் சங்க தலைவர் ஆதிமூலம், திருப்புவனம் வட்டாரத்தில் சுமார் மூன்று லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. ஏக்கருக்கு 70 முதல் 90 மரங்கள் வரை வளர்க்கலாம் என அரசு சொல்கிறது.

திருப்புவனம் வட்டாரத்தில் மூன்று லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. தேங்காயை விவசாயி விளைவித்தாலும் விலையை எங்கோ உள்ள வியாபாரி தான் நிர்ணயிக்கிறார். நெல் கொள்முதல் செய்வது போல தேங்காயையும் அரசு கொள்முதல் செய்யலாம். கொப்பரை தேங்காய் ஒரு கிலோவுக்கு ரூ.103 கொடுக்கப்படுகிறது. கொப்பரை தேங்காய் அரசு கூறும் அறிவுரைப்படி விவசாயிகளால் கொடுக்க முடியவில்லை.

கொப்பரை தேங்காய் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு இல்லை. தேங்காய் சிரட்டையிலிருந்து செயற்கை கிராபைட் தயாரிக்கப்படுகிறது. தேங்காயில் மதிப்புக்கூட்டி பல்வேறு பொருட்கள் தயாரிக்கலாம். இதுபோன்ற தொழில்களில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேங்காய்களை அரசே கொள்முதல் செய்யவேண்டும் என்றார்.

The post திருப்புவனம் பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியால் கவலையில் விவசாயிகள்: அரசே கொள்முதல் செய்ய வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tiruvuvam ,Tirupuvanam ,Vaigai ,
× RELATED அணையில் தண்ணீர் திறப்பால் மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு